Friday, 15 August 2014
குழந்தைத் தொழிலாளர்கள்
முரண்பாடுகளின் மொத்த உருவம் :)
கருப்பும் ஒரு அழகுதான், கசப்பும் ஒரு சுவைதான் என்பேன்,
சாக்லெட் வேண்டாம் வெண்ணிலா ஐஸ்க்ரீம் வேண்டும் என்பேன்.
இந்தியா எனது தாய்நாடு என சூளுரைப்பேன்,
இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வந்து செல்லவும் யோசிப்பேன்.
குழந்தைகளுக்கு நம் கருத்தைத் திணிக்கக் கூடாது என தோழிக்கு அறிவுரை சொல்லுவேன்,
என் பிள்ளைகளிடம், "சாமி கும்பிடு"என்பேன்.
உங்ககூட இருக்க முடியாது, நான் அம்மா வீட்டுக்குப் போறேன்னு சொல்வேன்,
கொஞ்ச நேரத்திலேயே, "evening snacksக்கு என்ன செய்யட்டும்னு" கேட்பேன் :)
(நான் எப்போதான் ஒழுங்கா ஒரு ட்விட்லாங்கர் எழுதுவேனோ தெரியலை!)
தினமும் ஒரு லெட்டர்
ஆமா! நிஜமாவே தினமும் ஒரு லெட்டர் எழுதிட்டு இருக்கேன் அவருக்கு. இப்போ எனக்கு 8மாசம். அம்மா வீட்ல இருக்கேன். அவர் சிங்கப்பூர்ல இருக்கார். போன மாசம் வரை அங்கதான் இருந்தேன்.
சிங்கப்பூர்ல இருந்த வரைக்கும் நாட்களை எண்ணிட்டு இருந்தேன் எப்போ அம்மா அப்பாவைப் பாக்கப் போறேன்னு. இப்போ அவரை எப்போ பாக்கப் போறேன்னு நாளை எண்ணிட்டு இருக்கேன். போன் பேசலாம்தான். என்னவோ லெட்டர் மனசுக்கு நெருக்கமா இருக்கும்.
எப்படி எனக்கு விஷயம் கிடைக்கிது தினமும் எழுத? :))) எனக்கே தெரியலை.
பையன் பிறந்த உடனே பாஸ்போர்ட் எடுக்கனும்னு அப்பாவைத் தொல்லை பண்ணினேன். பாவம் அம்மாவும் அப்பாவும், குழந்தையைக் கொஞ்சனும்னு ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. அப்போ அதெல்லாம் புரியலை. குழந்தைக்கு மூணுமாசம் முடியும்முன்னாடியே, (கழுத்துகூட நிக்கலை) சிங்கபூருக்கு தூக்கிட்டு வந்துட்டேன்.
அவரை வேலைக்கு அனுப்பிட்டு, குழந்தையும் தூங்கின பிறகு வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிச்சேன்.
அப்போதான் பாத்தேன் டீவிக்குப் பக்கத்தில் ஒரு காகிதக் கட்டு. உண்மையில் அது கடிதக் கட்டு. ஆமா! நான் எழுதின கடிதங்களேதான். ஆனா எதுவுமே பிரிக்கப்படலை!
ஒரு காட்சி
உச்சி வெயிலில் சாலையின் நடுவில்
ஒரு கட்டிடத் தொழிலாளி பேசிக்கொண்டிருந்ததை பயணம் செய்து கொண்டிருக்கும் பேருந்திலிருந்து காண்கிறேன். என்ன பேசியிருப்பான்?
அம்மாவிடம்:சாப்பிட்டேன், இப்போ ஓய்வெடுத்துகிட்டு இருக்கேன்மா
மனைவியிடம்:இந்த வருடக் கடைசியில் கண்டிப்பா ஊருக்கு வரேன்
பிள்ளையிடம்:சரிப்பா, நீ சொன்னதெல்லாம் அப்பா வரும்போது வாங்கிட்டு வரேன்
இத்தனையும் சொல்வதற்கு சற்று முன்புதான், தன் முதலாளியிடம் இன்னும் இரண்டு வருடங்களுக்குத் தன் வேலையை நீட்டிக்கச் செய்யும் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருப்பான், வாங்கிய கடனுக்காக!
அல்லது....
நண்பனிடம்:டேய்! ஜிகர்தண்டா படத்துக்கு எனக்கும் ஒரு டிக்கெட் எடுத்து வை, சாயந்திரம் வேலை முடிஞ்சி நேரா வந்துர்றேன்.
பார்வை
கால்கள் வலிமையில்லாத ஒருவர், சக்கர நாற்காலியோடு சேர்த்துக் கட்டப்பட்ட கால்களோடு, தினமும் ஒரே இடத்தில் அமர்ந்து, காலை முதல் மாலை வரை லாட்டரி டிக்கெட்களும் போன் கார்டுகளும் விற்றுக் கொண்டிருக்கிறார்.
அவர் பொதுவாக நிமிர்ந்து முகங்களைப் பார்ப்பதில்லை. குனிந்து கொண்டே இருக்கிறார், யாரேனும் வந்து ஏதேனும் கேட்கும் வரை.
அவர் குனிந்த தலை நிமிராமல் தினமும் தன்னைக் கடந்து விரையும் கால்களை பார்த்து தன் கால்களை சபித்துக் கொண்டிருக்கிறாரோ!
ஒருநாள் கவனித்தேன். நானும் என் கணவரும் கடக்கையில் அவரிடம் சிறு பதற்றம். ஆனால் இப்போதும் அவர் கால்களையேதான் பார்த்துக் கொண்டிருந்தார். சில நாட்களுக்கு இது தொடர்ந்தது.
பின்னர் ஒருநாள் நாங்கள் கவனித்தோம், அவர் கால்களில் புத்தம் புதிய shoe. அப்படியே என் கணவருடையதைப் போலவே.
நாங்கள் சிரித்ததை கவனித்து அவரும் நிமிர்ந்து பார்த்து எங்களுடன் சிரிப்பில் கலந்து கொண்டார்.
அறை
என் ஒரு பையனுக்கு 4வயது. பள்ளி விடுமுறையில் அம்மா வீட்டுக்கு வந்திருந்தோம்.
அம்மா, நாங்கள் வந்த மறுநாளே ஆரம்பித்துவிட்டார். கிளம்புங்க கோயிலுக்குப் போகலாம் என்று. இன்னும் இங்கு இருக்கும் வரை தினமும் ஒரு கோயிலுக்கு கூட்டிப்போய் ஞானப்பால் ஊட்டுவார்.
அரச மரத்தடி பிள்ளையார் கோயிலில் இருந்து, ஆக்ஸிடெண்ட் கோயில்(ஒருமுறை,பள்ளிக் குழந்தைகள் சில ஒரு மரத்தடியில் பஸ்ஸுக்காக காத்திருந்தபோது, பஸ் அவர்களை கொன்றுவிட்டது, அந்த மரம் சாமியாகிவிட்டது) போய், திருச்செந்தூர் வரை எல்லாக் கோயிலுக்கும் கூட்டிப் போவார். பொறுமையே தெய்வம்.
இன்று ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு கோயில். இன்னும் கோயில் திறக்கவில்லை. கோயில் இருந்ததோ சாலையின் ஓரத்தில். பையனை ரோட்டுக்கு ஓடிவிடாமல் பிடித்துக் கொண்டிருந்ததில் எரிச்சலில் இருந்தேன். அவன் கோயிலைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தான். சற்று கவனம் மாறியபோது ரோட்டுக்கு ஓடிவிட்டான். பயந்து ஓடி இழுத்து வந்தேன். பளாரென்று முதுகில் ஒரு அறை வைத்தேன். 'ஓ'வென்று அழுதான். பளாரென்று கன்னத்தில் ஒரு அறை. இந்த முறை அறைவாங்கியது நான். அடித்தது அம்மா. அழுகை நின்றுவிட்டது பையனுக்கு!
பி.கு. இது கதையல்ல, நிஜம் :(
முதிர்கன்னி
பூமிக்கு வயதானது தெரியவில்லை.
ஆனால், தசைகளின் தொய்வில், தோலின் சுருக்கத்தில் என் வயது தெரிகிறது!
வந்து பார்த்த அனைவரும்
தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக தொலைபேசி சொல்கிறது.
விளக்கைத் தேய்த்து சாமிக்கு பூஜை செய்யச் சொல்கிறாள் அம்மா,
நானோ விளக்கைத் தேய்த்துவிட்டு பூதத்திற்காகக் காத்திருக்கிறேன்!
அப்பாவும் நானும்
நான் 10வது படிக்கும்போது, ஒரு உறவினர் வீட்டில் தங்க நேர்ந்தது. அப்பாவின் மடியில் நான் தூங்கியதை அத்தை கிண்டல் செய்ததும், அப்பா விட்டுக் கொடுக்காமல் பேசியதும் நினைவில் இருக்கிறது.
நான் பாலிடெக்னிக் படிக்கும்போது, அப்பா ஞாயிறு என்னைப் பார்க்க விடுதிக்கு வருவதும், என் தோழிகள் அப்பாவைப் பார்த்து "உங்க அண்ணா மாதிரி இருக்கார்னு" சொன்னதும் நினைவில் இருக்கு.
திருமணமாகி எட்டு மாதங்களுக்குப் பின் விமான நிலையத்தில் அப்பா அழுததை முதலும் கடைசியுமாக பார்த்ததும் நினைவில் இருக்கிறது.
அப்பா-தாத்தா ஆனதும்..நான் தூங்கிய மடியில் என் பிள்ளைகளை தூங்க வைத்ததும் நன்றாக நினைவில் இருக்கிறது.
ஆனால் கடைசியாக அப்பாவிடம் என்ன பேசினேன்? என்ன சொன்னார்? எத்தனை முறை நினைவு படுத்தியும் நினைவுக்கு வரவில்லை.
Life of sky
Life of sky
என்னோட அப்பாவுக்கு விண்வெளி ஆராய்ச்சின்னா பிடிக்கும். அவருக்கு ரொம்ப பிடிச்ச 'ஸ்கை' அப்படின்ற விண்கலத்தோட பேர் எனக்கு வச்சிட்டார்.
ஸ்கூல்ல எல்லாரும் ஸ்கை-வானம்-வானரம்னு கிண்டல் பண்ணுவாங்க. எனக்கு வானம் ரொம்ப பிடிக்கும். விண்வெளி, நட்சத்திரம் பத்தின புத்தகம் எல்லாம் படிச்சிட்டேன்.
எங்களுக்கு ஒருமுறை பரிசு குலுக்கல்ல விண்வெளிக்குப் போறதுக்கு இலவச டிக்கெட் பரிசு கிடைச்சது. எல்லோரும் கிளம்பிட்டோம்.
அந்த நாள் வந்தது. எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினோம். நான், அண்ணா, அம்மா, அப்பா அப்புறம் என்னோட மியாவ்!
விண்வெளிக்கலம் கிளம்பி 3வது நாள். எல்லோரும் தூங்கிட்டு இருந்தோம் எதோ சத்தம் கேட்டு முழிச்சி பாத்தேன். விண்கலத்தில் தீ! எதையும் யோசிக்காம குதிச்சிட்டேன்.
நான் கண்திறந்து பாத்தப்போ ஒரு மேகத்துமேல படுத்திருந்தேன். அழுதேன். என் சட்டைப் பையில் பாதி பிஸ்கட் பாக்கெட்டும், இன்னொரு பையில் மியாவ் மட்டும்.
இந்த மேகத்துமேல் வாழ ஆரம்பிச்சி எத்தனை நாளாச்சின்னு தெரியலை. ஒருநாளைக்கு ஒரு துண்டு பிஸ்கட்ன்னு சாப்பிட்டுகிட்டு இருக்கேன். எப்பவாவது காத்தடிச்சி மேகம் நகரும்போது சந்தோஷமா இருக்கும்.
எப்பவாவது என் மேகம் மேல் விண்மீன் வந்து விழும். சுட சுட சாப்பிட்டுருவேன்.
என் மேகம் காத்தில் கரையவும் இல்லை, மழை பெய்து காலியாகவும் இல்லை.
ஒருநாள் நல்ல காத்து. மேகம் எங்கயோ போகுது. திடீர்னு ஒரு மரத்துமேல இடிச்சி நின்னுருச்சி. கடகடன்னு மரத்துக்கு இறங்கிட்டேன். அப்புறம் தரைக்கு கொஞ்ச கொஞ்சமா இறங்கினேன்.
அந்தப் பக்கமா வந்த யாரோ பாத்துட்டு காப்பாத்தினாங்க. இதோ இப்ப நீங்க கேமராவத் தூக்கிட்டு வந்துட்டிங்க. என் குடும்பம் எங்க இருக்காங்கன்னு தெரியுமா?
யாருக்காவது தெரியுமா?