அனைவரும் உறங்கிவிட்டார்கள். மெல்ல எழுந்து வந்து சோபாவில் அமர்ந்து கொண்டேன். இருள். புத்தகம் படிக்க வெளிச்சம் வேண்டும். வேறு வழியில்லை கைபேசிதான் துணை.
(மனம் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்ததைத்தான் வேறு வழியில்லை என்று நம்மை நம்ப வைக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு.)
Twitter உலகம். யார் யாரோ யார் யாருடனோ பேசிக் கொண்டு. நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சன்னல்வழி தெரிந்தது எதிரில் அடுக்குமனை. ஏதோ சலனம் கவனம் கலைக்க, தலையுயர்த்திப் பார்த்தேன்.
எதிரில் இருந்த அடுக்குமனையின் ஒரு வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்த உருவம் சற்று நேரம் வெளியே வேடிக்கை பார்த்தது. சரிதான், நம்மைப்போலவே நாளை நீட்டிக்கும் வேலை என்று நினைத்தேன்.
அந்த உருவம் ஒரு பெண். அதன் உயரம் இப்போது அதிகரித்திருந்தது. ஓ! எதன் மீதோ ஏறி நிற்கிறாள். மூளை உடனே விழித்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை வரிசைப் படுத்தியது. சற்றும் தாமதிக்காமல் கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினேன்.
கேமராவைத் திறந்து படத்தை பதியும் முன் விழுந்து விட்டாள்.
No comments:
Post a Comment