Friday 22 March 2019

தெரியாது

'தெரியாது' என்பதையும் பதிலாக ஏற்க நீங்கள் தயாரென்றால் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் உள்ளது!

Thursday 8 January 2015

ஹீரோ

நோ.. நோ.. நோ.. நோ.. இது அஜித் விஜய் பத்தினது இல்லை! இது நிஜ வாழ்க்கையின் ஹீரோ!

இவர், ITI படிச்சிட்டு, 20 வயசுல கிராமத்தில இருந்து சென்னைக்கு ஓடிப்போனார்! அன்னைலருந்து இது வரைக்கும் தன் அப்பா கிட்ட இருந்து ஒரு பைசா வாங்கலை.
தானே வேலை தேடி, தன் தம்பிகள் மூணு பேரையும் சென்னைக்கு வரவழைச்சார்.
தனக்கும் ரெண்டு தம்பிகளுக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கினார். ஒரு தம்பியை சென்னைலயே படிக்க வச்சார்.
தன் தங்கைக்கு நகை போட்டு கல்யாணம் செய்து வைத்தார். தானும் ஒரு கல்யாணம் பண்ணிட்டார்.
தன் விதவை அக்காவின் பிள்ளைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கித்தந்தார்.
இன்னும் நீண்டு கொண்டே போகும்... 
"ஆறிலிருந்து அறுபது வரை" ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்லை.
கதைன்னா ஒரு ட்விஸ்ட் வேணும்ல?! ஒண்ணும் இல்லை! சும்மா, பகிர்ந்துக்கணும்னு தோணுச்சி அதான்.
Bye :)
ஆங்! சொல்ல மறந்துட்டனே, இவ்ளோ நேரம் சொன்னது என் கணவரைப் பத்திதான் ;)

Friday 15 August 2014

குழந்தைத் தொழிலாளர்கள்

வறுமை நாரெடுத்துக் கோர்த்த பூமாலை நாங்கள்.

எங்களில் பலர் குடும்பத்துக்கே சோறுபோடும் குடும்பத் தலைவர்கள்.

"ஏன் வேலைக்குப் போற" என்று கேட்பவர்களை மெளனமாகக் கடந்துவிடுகிறோம். முட்டாள்களுடன் நாங்களும் விவாதிப்பதில்லை.

'உணவுவேளை' என்று ஒன்று உங்களில் பலருக்கு உண்டு,
உணவு கிடைக்கும் வேளைதான் உணவுவேளை எங்களுக்கு.
பசியை ஒரு வார்த்தையாக அறிந்தவர்கள் நீங்கள். பசியை உணர்வாக அறிந்தவர்கள் நாங்கள்.

எந்த நடிகருக்காகவும் சண்டையிட்டதில்லை நாங்கள்.
எங்கள் ஹீரோ நாங்கள்தான்,
நாங்கள் எதிர்நோக்கும் சவால்களை எந்த ஹீரோவும் இதுவரை சந்தித்ததில்லை.

உங்கள் பரிதாபப்பார்வைகளை நிறுத்திவிட்டு, இந்த பட்டாணி சுண்டல்களை முடிந்தால், உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கிச் செல்லுங்கள். 

முரண்பாடுகளின் மொத்த உருவம் :)

எதாவது குறையிருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன் என்பேன், ஆனால் குறை சுட்டுபவர்களைப் பிடிக்காது.
கருப்பும் ஒரு அழகுதான், கசப்பும் ஒரு சுவைதான் என்பேன்,
சாக்லெட் வேண்டாம் வெண்ணிலா ஐஸ்க்ரீம் வேண்டும் என்பேன்.
இந்தியா எனது தாய்நாடு என சூளுரைப்பேன்,
இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வந்து செல்லவும் யோசிப்பேன்.
குழந்தைகளுக்கு நம் கருத்தைத் திணிக்கக் கூடாது என தோழிக்கு அறிவுரை சொல்லுவேன்,
என் பிள்ளைகளிடம், "சாமி கும்பிடு"என்பேன்.
உங்ககூட இருக்க முடியாது, நான் அம்மா வீட்டுக்குப் போறேன்னு சொல்வேன்,
கொஞ்ச நேரத்திலேயே, "evening snacksக்கு என்ன செய்யட்டும்னு" கேட்பேன் :)

(நான் எப்போதான் ஒழுங்கா ஒரு ட்விட்லாங்கர் எழுதுவேனோ தெரியலை!)

தினமும் ஒரு லெட்டர்

ஆமா! நிஜமாவே தினமும் ஒரு லெட்டர் எழுதிட்டு இருக்கேன் அவருக்கு. இப்போ எனக்கு 8மாசம். அம்மா வீட்ல இருக்கேன். அவர் சிங்கப்பூர்ல இருக்கார். போன மாசம் வரை அங்கதான் இருந்தேன். 
சிங்கப்பூர்ல இருந்த வரைக்கும் நாட்களை எண்ணிட்டு இருந்தேன் எப்போ அம்மா அப்பாவைப் பாக்கப் போறேன்னு. இப்போ அவரை எப்போ பாக்கப் போறேன்னு நாளை எண்ணிட்டு இருக்கேன். போன் பேசலாம்தான். என்னவோ லெட்டர் மனசுக்கு நெருக்கமா இருக்கும். 
எப்படி எனக்கு விஷயம் கிடைக்கிது தினமும் எழுத? :))) எனக்கே தெரியலை. 
பையன் பிறந்த உடனே பாஸ்போர்ட் எடுக்கனும்னு அப்பாவைத் தொல்லை பண்ணினேன். பாவம் அம்மாவும் அப்பாவும், குழந்தையைக் கொஞ்சனும்னு ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. அப்போ அதெல்லாம் புரியலை. குழந்தைக்கு மூணுமாசம் முடியும்முன்னாடியே, (கழுத்துகூட நிக்கலை) சிங்கபூருக்கு தூக்கிட்டு வந்துட்டேன்.
அவரை வேலைக்கு அனுப்பிட்டு, குழந்தையும் தூங்கின பிறகு வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிச்சேன்.
அப்போதான் பாத்தேன் டீவிக்குப் பக்கத்தில் ஒரு காகிதக் கட்டு. உண்மையில் அது கடிதக் கட்டு. ஆமா! நான் எழுதின கடிதங்களேதான். ஆனா எதுவுமே பிரிக்கப்படலை!


ஒரு காட்சி

உச்சி வெயிலில் சாலையின் நடுவில்
ஒரு கட்டிடத் தொழிலாளி பேசிக்கொண்டிருந்ததை பயணம் செய்து கொண்டிருக்கும் பேருந்திலிருந்து காண்கிறேன். என்ன பேசியிருப்பான்?

அம்மாவிடம்:சாப்பிட்டேன், இப்போ ஓய்வெடுத்துகிட்டு இருக்கேன்மா

மனைவியிடம்:இந்த வருடக் கடைசியில் கண்டிப்பா ஊருக்கு வரேன்

பிள்ளையிடம்:சரிப்பா, நீ சொன்னதெல்லாம் அப்பா வரும்போது வாங்கிட்டு வரேன்

இத்தனையும் சொல்வதற்கு சற்று முன்புதான், தன் முதலாளியிடம் இன்னும் இரண்டு வருடங்களுக்குத் தன் வேலையை நீட்டிக்கச் செய்யும் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருப்பான், வாங்கிய கடனுக்காக!

அல்லது....

நண்பனிடம்:டேய்! ஜிகர்தண்டா படத்துக்கு எனக்கும் ஒரு டிக்கெட் எடுத்து வை, சாயந்திரம் வேலை முடிஞ்சி நேரா வந்துர்றேன்.


பார்வை

கால்கள் வலிமையில்லாத ஒருவர், சக்கர நாற்காலியோடு சேர்த்துக் கட்டப்பட்ட கால்களோடு, தினமும் ஒரே இடத்தில் அமர்ந்து, காலை முதல் மாலை வரை லாட்டரி டிக்கெட்களும் போன் கார்டுகளும் விற்றுக் கொண்டிருக்கிறார்.
அவர் பொதுவாக நிமிர்ந்து முகங்களைப் பார்ப்பதில்லை. குனிந்து கொண்டே இருக்கிறார், யாரேனும் வந்து ஏதேனும் கேட்கும் வரை.
அவர் குனிந்த தலை நிமிராமல் தினமும் தன்னைக் கடந்து விரையும் கால்களை பார்த்து தன் கால்களை சபித்துக் கொண்டிருக்கிறாரோ!
ஒருநாள் கவனித்தேன். நானும் என் கணவரும் கடக்கையில் அவரிடம் சிறு பதற்றம். ஆனால் இப்போதும் அவர் கால்களையேதான் பார்த்துக் கொண்டிருந்தார். சில நாட்களுக்கு இது தொடர்ந்தது.
பின்னர் ஒருநாள் நாங்கள் கவனித்தோம், அவர் கால்களில் புத்தம் புதிய shoe. அப்படியே என் கணவருடையதைப் போலவே.
நாங்கள் சிரித்ததை கவனித்து அவரும் நிமிர்ந்து பார்த்து எங்களுடன் சிரிப்பில் கலந்து கொண்டார்.